கருவரையே கல்லறையாய் …..
- மயூரா அகிலன்
சூல் கொண்ட பொழுதில் இருந்து
ஒவ்வொரு நொடியிலும்
உன் முகம் பார்க்க தவமிருந்தேன்…
என் கருவில் உருவான
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
என் கற்பனையில் கண்டு பூரித்தேன் ….
உன் முதல் துடிப்பை உணர்ந்த பொழுது
லட்சம் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடித்தன….
வயிற்றில் எட்டி உதைக்கையில்
தொட்டுத்தடவி முத்தமிட்டேன்…
என்னுள் சுற்றி வந்த நீ
உன் இயக்கத்தை திடீரென நிறுத்திக்கொண்டாய் !
என்னுள் இடியை இறக்கிவிட்டு
நிம்மதியாய் நீ உறங்கிவிட்டாய் !
என் கருவறையே உனக்கு
கல்லறையாய் போனதடி கண்ணே…
பத்துத்திங்கள் சுமக்க மட்டும்தான்
நீ எனக்கு வரமளித்தாயோ?
வெற்றுத்தொட்டிலும் வீணாய் போன தாய்பாலும்
உன்னை நித்தம் நித்தம் எண்ணி தவிக்குதடி….
அம்மாவின் அருமை
- மயூரா அகிலன்
பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீடு போகும் வரை
தெரியவில்லை
அம்மாவின் அருமை…
எட்டு மணிவரை தூங்கினாலும்
எழுப்ப யோசித்த
அம்மாவின் அருமை
ஐந்து மணிக்கு
அலாரம் அடித்தபோது
தெரிந்தது…
படித்த புத்தகத்தை
படுக்கையிலே போட்டாலும்
பார்த்து எடுத்து வைத்த
அம்மாவின் அருமை
எதையும் எடுத்த இடத்தில்
வைக்க வேண்டும்
என்ற போது புரிந்தது…
பசித்த நேரத்தில்
சோறூட்டிய
அம்மாவின் அருமை
பத்துப்பாத்திரம் தேய்க்கையில்
தெரிந்தது…
என்னை பத்து மாதம்
சுமந்த அம்மாவின் அருமை
எனக்கு குழந்தை பிறக்கையில்
முற்றிலும் புரிந்தது.
தும்பைப்பூவும் வண்ணத்துப்பூச்சியும்
- மயூரா அகிலன்
சாலையோரங்களில்
மலர்ந்திருந்த
தும்பைப் பூக்கள்…
தேனை அருந்த
பூக்களில் அமர்ந்த
வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க
ஆசையாய் நீ
அருகில் சென்றபோது…
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து போனது கண்டு
உன் முகம் வாடிப்போனது…
உன்னை மகிழ்விக்க
நான் அலைந்து திரிந்து
வண்ணத்துப்பூச்சிகளை
பிடித்து கொடுத்தேன்….
பூச்சிகளின் வண்ணங்கள்
உன் கைகளில் ஒட்டியது கண்டு
பதறிப்போன நீ
அவற்றை மீண்டும்
சுதந்திரமாய்
பறக்க விட்டு விட்டாய்.
மீன்பிடித் திருவிழா
- மயூரா அகிலன்
கோடையில அடிச்ச வெயிலுக்கு
குளம், குட்டையல்லாம் வத்திப் போச்சு…
கொஞ்ச நஞ்ச தண்ணியில
அயிரையும், கெளுத்தியும்
துள்ளிக்கிட்டுருக்கும்….
ஊரே கூடி வந்து
சேத்தக் கிளறி மீன் பிடிக்க
அகப்பட்டவரைக்கும்
கொண்டாட்டந்தான்…
கொசுவலையும், மூங்கில் கூடையும்
மீனால நெறைஞ்சிருக்க
ஊரெல்லாம் மணக்கும்
மீன் கொழம்பு வாசனை…
பொண்ணு கட்டுன மாப்பிள்ளைக்கு
அயிரை மீன் கொழம்பு
அத்தனை பிரியமாம்…
அதனால
அயிரையும், கெளுத்தியும்
பக்கத்து ஊருக்கும் பங்கு போகும்.
மண்ணாளச் சென்ற மகள்
- மயூரா அகிலன்
No comments:
Post a Comment