விடை கொடு கிராமமே !
கரிசல் மணலில் நடந்த என் பாதங்கள்
இனி கடற்கரை மணலில்
விளையாடப்போகின்றன….
கம்மாக்கரையோரம்
கரைந்த என் பொழுதுகள்
இனி கடல் அலைகளின்
சப்தத்தில் கரையும்…..
சேவல் கூவிய உடன்
விடிந்த என் பொழுதுகள்
இனி மின்சார ரயிலின் ஓசையில் விடியும்….
குயில்கள் கூவிய மாந்தோப்பும்
மயில்கள் ஆடிய காடுகளும்
இனி கனவுகளில் என் மட்டுமே தோன்றும் ….
எளந்தா ஊரணி தண்ணீர் போய்
இனி மெட்ரோ வாட்டர் தான்
என் தாகம் தீர்க்கும்…..
அக்கம் பக்கம் வீடுகளின்
நேசம் விட்டு போகும் எனக்கு
இனி அண்டை வீட்டார் கூட
அந்நியமாய் தோன்றும் …..
என் கிராமத்து மண்ணே !
உன்னைவிட்டு
விடை பெறுகிறேன்…..
பிறந்த வீட்டை பிரிந்து
புகுந்த வீடு செல்வது கூட
துயரில்லை எனக்கு…
என் மண்ணையும்
வேப்பமரத்தடி திண்ணையையும்
விட்டுச்செல்வதில்தான்
ஏற்படுகிறது ஒரு வலி …..
No comments:
Post a Comment