பனையோலை காத்தாடி
- மயூரா அகிலன்
நெருப்பு பொறி பறக்கும்
அக்னி வெய்யில்…
அனலுக்கு இதமாக
பதநீருடன் நுங்கு சேர்த்து
போட்டி போட்டு
பருகிய காலங்கள்…
பனங்காயை கோர்த்து
வண்டியோட்டிய
மழலைப் பருவம்…
பனையோலையோடு
சோளத்தட்டை சேர்த்து
காத்தாடியாக்கிய
விடலைப் பருவம் என...
பழையவை எல்லாம்
அவ்வப்போது அவசரமாய்
நினைவில் எட்டிப்பார்க்கும்…
வயற்காட்டு வேலியில்
அமர்ந்த தட்டானைப் பிடித்து
வாலில் நூல்கட்டி
விளையாடிய
பொழுதுகள் மட்டும்
இன்றைக்கும் அழியாமல்
நினைவில் நிற்கும்
கோடை காலமும் ஆலங்கட்டி மழையும்……
- மயூரா அகிலன்
இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !
சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !
சொட்ட சொட்ட நனைந்த உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !
பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !
ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..
ஆனால்….
சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !
மழைக்காக ஒரு பிரார்த்தனை
- மயூரா அகிலன்
கத்திரி கழிஞ்ச உடனே
காத்தடிக்க ஆரம்பிக்கும்…
உழுது போட்ட நிலம்
உலந்த பெறகு மழை பேஞ்சா
மண்ணெல்லாம் பசியாறும்…
பருவமழை காலத்துல தொடங்குனா
வயக்காட்டுல நெல்லு
நல்லா விளையுமுன்னு
தாத்தா சொன்னாங்க….
சித்திரை மொதநாளு
பொன்னேரு கட்டுனப்ப
பொட்டுன்னு விழுந்த
மழைத்துளியால
மனசெல்லாம் குளுந்திருச்சி!
மக்க மனசப்போலவே
மழையும் சரியா பெய்து
வெள்ளாமை விளையணும்னு
தாத்தா கும்பிட்டது
தனக்காக மட்டுமில்ல.
நெஞ்சில் நிறைந்த நினைவுகள்…
- மயூரா அகிலன்
அதிகாலையில்
அலாரம் வைத்து
எழுவது முதல்
அலுவலகம் சென்று
திரும்பும் வரை….
அலுப்பூட்டும்
நகரவாழ்க்கைக்கு நடுவே
அவ்வப்போது
எட்டிப்பார்க்கும்
கிராமத்து நினைவுகள்…
திண்ணையில் விளையாடிய
பல்லாங்குழி…
அக்காவுடன் ஆடிய
கிளித்தட்டு…
கண்மாயில்
வைத்த நீச்சல் பந்தயம்
என நெஞ்சம் முழுக்க
நிறைந்து கிடக்கும்
பருவகால நினைவுகள்…
நகரவாழ்க்கையில்
ருசிக்காக
அவ்வப்போது
பீட்சாவும், பர்கரும்
விதவிதமாய் சுவைத்தாலும்….
காக்காய் கடி
கடித்து தின்ற
கடலை உருண்டையும்
கமர்கட் மிட்டாயும்
கடைசிவரை
நாவில் இனிக்கும்…
ஊருக்கு போன மகாராஜாக்கள்
- மயூரா அகிலன்
பூக்கள் இல்லாத
நந்தவனம் போல்
வெறுமையாய் இருக்கிறது வீடு…
பூபாளம் இசைத்த வீட்டில்
வெறும் அமைதி கீதம்…
இளவேனிற்காலமாய்
இனித்த வாழ்க்கையில்
ஏனிந்த இலையுதிர்காலம்?.
மழலை மகாராஜாக்கள்
ஊருக்கு சென்றிருப்பதால்
கலவரமும் கும்மாளமுமாய்
இருந்த வீட்டில்
அமைதியின் ராஜாங்கம்…
இது தற்காலிகம்தான்
என்றாலும்
தனிமை கொல்கிறது.
No comments:
Post a Comment